2021 தேர்தல்:என்ன செய்யப் போகிறார்கள் இவர்கள்?

2021 தேர்தல்:என்ன செய்யப் போகிறார்கள் இவர்கள்?
Published on

சட்டத்தின் ஆட்சி அரசாங்கத்தில் இருந்து நழுவி பல பேரிடம் சென்றுவிட்டது. காவல்துறையின் கட்டுப்பாடு மழுங்கடிக்கப்பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய காலம் வந்துவிட்டது''& என ஆவேசப்பட்டிருக்கிறார் முன்னாள் பாஜக மத்திய அமைச்சர், பொன். ராதாகிருஷ்ணன். திருச்சியில் பாஜக பிரமுகர் ஒருவர் கொலை தொடர்பாக அவர் வெளியிட்ட கருத்து இது. முன்னதாக களியக்காவிளையில் எஸ்.ஐ. வில்சன் சுட்டுக் கொலைசெய்யப்பட்டபோது  ‘தமிழகம் பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறிவிட்டது'என்று கடுமையாக குற்றம் சாட்டினார். பதிலுக்கு ஜெயக்குமார், பாஸ்கரன் போன்ற அதிமுக அமைச்சர்களும் கடுமையாக பதில் தந்திருக்கின்றனர். நேரடியாக சமீபத்தைய டிவி விவாதம் ஒன்றில் பாஜக பிரமுகருக்கும் அதிமுகவின் இஸ்லாமியப் பிரமுகர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட மோசமான மோதலும் மக்களுக்கு சில விஷயங்களுக்குக் கோடு காட்டி இருக்கின்றன. அதிமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிக்கும் இடையே தமிழ்நாட்டில் உறவில் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை இது காட்டுகிறது.

உள்ளாட்சித் தேர்தல்களையொட்டியே இரு கட்சிகளுக்கும் இடையே வார்த்தை மோதல் என்பது தொடங்கிவிட்டது. அடுத்த ஆண்டு வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக என்ன செய்யப்போகிறது? கூட்டணியில் பாஜகவை வைத்திருக்குமா? என்பதுதான் எல்லா அரசியல் நோக்கர்கள் மனதிலும் இருக்கும் கேள்வி.

ரஜினி என்ன சொன்னாலும் அதை ஊதிப்பெரிதாக்க ஊடகங்கள் இருக்கின்ற நிலையில் அவர் நிலைப்பாடு என்ன என்பதும் இதனுடன் பின்னிப் பிணைந்ததாக இருக்கிறது. சேலத்தில் 1971&ல் நடந்ததாக அவர் பேசியதும் அதற்கு அதிமுக தரப்பில் இருந்து வெளிப்பட்ட உரசலான எதிர்வினையும் ரஜினி திட்டமிட்டதுபோல் எதுவும் நடப்பது எளித்தல்ல என்பதையே உணர்த்துகிறது.

‘‘நேரடியாக எந்த களப் பணியும் செய்யாமல் இயக்கத்தைக் கட்டாமல் திரைப்படத்தில் ஒரே பாடல் முடிவதற்குள் ஆட்சியைப் பிடிப்பதுபோல் முதல்வர் ஆகவேண்டும் என்பதுதான் இதுவரை ரஜினியின் செயல்பாடுகள் உணர்த்தி இருப்பது. ஆனால் நிஜ அரசியல் அப்படி அல்ல. அவர் ஏதாவது பெரிதாகச் செய்யவேண்டும். அல்லது அவ்வளவு பெரிய வெற்றிடம் இருந்தாகவேண்டும். இல்லையெனில் பெரிய நிர்வாகக் கட்டமைப்பு கொண்ட ஒரு கட்சியின் தலைமைப் பொறுப்பை அவர் சுவீகரிக்கவேண்டும். இப்படி பல வாய்ப்புகளில் ஏதோ ஒன்றை அவர் இறுகப் பற்றவேண்டும். ஆனால் அதற்கான எந்த அறிகுறியும் இல்லை! அவ்வப்போது தமிழ்நாட்டில் போராடுகிறவர்கள், திராவிடக் கழகத்தினர் ஆகியோருக்கு எதிரான கருத்தைச் சொல்லி தன்னை வலதுசாரி என்று மட்டும் நிறுவ முயற்சி செய்கிறார். ஆனால் அதுபோதாது. பாஜகவுடன் கூட்டணி வைத்து, அதிமுகவில் இருக்கும் குழப்பத்தைப்பயன்படுத்திக்கொண்டு, ரஜினி முக்கிய முகமாக எழுந்துவர முடியும் என்பதுதான் அவருக்கு முன்னால் இருக்கும் வாய்ப்பு. ஆனால் இதைச் செய்வதற்கான மனநிலை அவருக்கு உள்ளதா என்பது சந்தேகமே,'' என்கிறார், அரசியல் நோக்கர் ஒருவர்.

ஜெயலலிதா மரணத்துக்குப் பின்னால் சசிகலாவால் முதல்வர் ஆக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி, இதோ வெற்றிகரமாக நான்காம் ஆண்டில் நுழைந்துவிட்டார். குறைவான எண்ணிக்கையில் கரணம் தப்பினால் மரணம் என்று எம்.எல்.ஏக்களை வைத்திருந்தாலும் ஆட்சியைக் காப்பாற்றிக் கொண்டுவிட்டார்.

இதற்கு அவரது நீக்குப்போக்கான தன்மை ஒரு காரணமாக இருந்தாலும் அதிமுகவின் அடித்தட்டுவரையிலான கட்சி நிர்வாகக் கட்டமைப்பும் ஒரு காரணம். தொண்டர்களை விலகிச்செல்லாமல் பார்த்துக்கொண்டது, அப்படியே விலகியவர்களும் தினகரனின் அமமுக பக்கம்தான் சென்றார்கள். சிலர் மீண்டும் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். ‘‘இந்நிலையில் வரும் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்க அதிமுகவுக்குப் பெரிய காரணங்கள் ஏதும் இல்லை. தமிழகக் கட்சிகள் பெரும்பாலும் சட்டமன்றத்துக்கு ஒரு கூட்டணி, நாடாளுமன்றத்துக்கு ஒரு கூட்டணி என்று வைத்துக் கொள்வதையே விரும்புவார்கள். இப்போதைக்கு ஆட்சியில் நீடிக்க பாஜகவின் உதவி தேவை என்பதால் பணியும் அதிமுக, தேர்தல் நெருங்கும்போது, நிமிர்ந்து நிற்கும் வாய்ப்பே அதிகம் உள்ளது,'' என்று தெரிவிக்கிறார் இன்னொரு அரசியல்  விமர்சகர்.

சரி இப்போதைக்கு சசிகலா, தினகரன் இருவரின் செயல்பாடு என்னவாக இருக்கும்?

‘‘சசிகலா சிறையில் வாடுவது வருத்தம் தருகிறது,'' என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொல்லி இருக்கிறார். இதுதான் அதிமுகவில் பலருக்கும் மனநிலை. ஓபிஎஸ் நடத்திய தர்மயுத்த காலம் அல்ல இது. இந்த ஆட்சிக் காலம் முடிந்த பின்னர் வலிமையான தலைமை ஒன்றை உருவாக்கும்  முயற்சிகள் நடக்கலாம். இந்த ஆண்டே ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் சிறையிலிருந்து சசிகலா வெளியே வந்துவிடுவார். அதன் பின்னர் அதிமுகவில் காட்சிகள் சூடுபிடிக்கலாம்,'' என்கிற அரசியல் நோக்கர்கள் அரசியலில் ரஜினி ஒருவேளை நுழைவாரென்றால் அவரது பங்கும் முக்கியமாக இருக்கும் என்கிறார்கள்.

பாஜகவுடன் ரஜினி கூட்டணி சேரும் பட்சத்தில் அவருடன் வேறு எந்த கட்சி சேரும்? தான் கட்சி தொடங்கவேண்டும் என்றால் அப்போது அதிமுக ஆட்சியில் இருக்கக்கூடாது. கவர்னர் ஆட்சி இருக்கவேண்டும் என்று அவர் முன்பு ஒருமுறை சொன்னதாக ஒரு தகவல் உலவியது. இதனால் வழக்குகள், வம்புகள் என்று இப்போதைய ஆட்சி தானாகவே கவிழ வைக்கப்பட்டு அதிமுக பலவீனமாக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.

''2014 தேர்தலில் இதுவரை எப்போதுமே இல்லாத வகையில் தனித்து நின்று 37 இடங்களை ஜெ. தலைமையிலான அதிமுக கைப்பற்றியது. அது அகில இந்திய அளவில் அரசியல் செய்யவேண்டும் என ஜெ முடிவெடுத்து, பாஜக கூட்டணியே வேண்டாம் என்பதுதான் தீர்மானமாக முடிவெடுத்திருந்தார். ஆனால் அவர் மறைவுக்குப் பின் அதிமுகவில் குழப்பங்கள்.  2019&ல் பாஜக மீண்டும் வென்றபிறகு அக்கட்சியின் பிடி  அதிமுக மீது இறுகித்தான் இருக்கிறது. ஆனாலும் அதிமுக அமைச்சர்கள், தொண்டர்களிடம் சற்று எதிரான மனநிலை இருக்கத்தான் செய்கிறது. மத்தியில் ஆளும் கட்சியுடன் இணக்கமாகப் போவது மாநில நலன்களுக்கு உகந்தது என்பது எம்ஜிஆர் பார்முலா. ஜெ.வோ எதுவாக இருந்தாலும்

சட்டப் போராட்டம் நடத்தத் தயங்கமாட்டார். ஆனால் இப்போதைக்கு மக்கள் செல்வாக்கு இல்லாத தலைமை இருப்பதால்தான் அதிமுகவுக்கு இந்த நிலைமை'' என்று விளக்கும் மூத்த பத்திரிகையாளர் துரை கருணா,'' எது எப்படி இருந்தாலும் 1967 தேர்தலுக்குப் பின்னால் இன்றுவரை அதிமுக அல்லது திமுக இந்த கட்சிகளில் ஒரு கட்சிதான் ஆட்சிக்கு வர முடியும். அதில் எந்த மாற்றமும் இருக்கப்போவதில்லை. ரஜினிகாந்த் மூன்றாவது அணி உருவாக்கி ஆட்சியைப் பிடிக்க முடியுமா என்றால், அதற்கு வாய்ப்பே இல்லை. இன்று வரை அவர், தான் போட்டியிடப்போகும் தொகுதி எது என்று முடிவெடுத்திருக்கிறாரா என்று கேளுங்கள். அவருக்கு வெற்றி வாய்ப்பு உறுதியான தொகுதி என்று எதையாவது சுட்டிக்காட்ட முடியுமா? எனவே ரஜினி முக்கிய பங்கு வகிப்பார் என்பதை உறுதியாகச் சொல்வதற்கில்லை'' என்கிறார்.

பாஜகவுடன் கூட்டணி சேராத பட்சத்தில் ரஜினியுடன் காங்கிரசின் ஒரு பகுதியும் டிடிவி தினகரனும் கூட்டணி சேர்ந்து வேறு சில கட்சிகளுடன் சேர்ந்து தேர்தலைச் சந்திக்கலாம்.

ஆனால் சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்துவிடும் நிலையில் அதிமுக - அமமுக இணைதல் பற்றிய பேச்சுகள் தொடங்கி அது செயல்பாட்டுக்கு வந்துவிட்டால், அதன் கை ஓங்கியே இருக்கும்.

இதற்கிடையே ரஜினியின் ஆதரவாளர் தரப்பு வரும் தேர்தலில் போட்டி என்பது ரஜினிக்கும் ஸ்டாலினுக்கும் இடையில்தான் இருக்கும் என்று அடித்துக் கூறிவருகின்றனர். அவர்களுக்கு பாஜக ரஜினி அணியில் இடம் பெறுவதில் எந்த தயக்கமும் இல்லை.

‘‘இது ரஜினிகாந்தை ஏமாற்றும் கருத்தாகவே எடுத்துக்கொள்ள முடியும்'' என்று சொல்லும் மூத்த பத்திரிகையாளர் எஸ்,பி.லட்சுமணன்,

'' அதிமுகவை அவ்வளவு எளிதாக புறந்தள்ளிவிட முடியாது. கிராமங்கள் தோறும் தொண்டர் படை கொண்ட கட்சி அது. சசிகலா சிறையில் இருந்து வெளியானபின் உருவாக இருக்கும் மாற்றங்களின் வாய்ப்பை மனதில் வைக்காமல் பேசும் பேச்சு அது,'' என்கிறார்.

அதிமுக தரப்பில் என்ன நடக்க வாய்ப்பு இருக்கிறது என்பதை மட்டுமே இப்போது பேச முடியும். ஒருவேளை காங்கிரஸ்& திமுக உரசல்கள் சரி ஆவதுபோல இப்போதைய பாஜக& அதிமுக உரசல் களும் சரியாகிவிடலாம்!

பிப்ரவரி, 2020.

logo
Andhimazhai
www.andhimazhai.com